ஆதி லட்சுமி :


ஆதி என்பதற்கு "முதல்" என்பது பொருள். திருப்பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும் கடைந்த போது நஞ்சு வந்தது. பின் காமதேனு, சந்திரன் எல்லாரும் வந்தார்கள். அப்போது தோன்றிய முதல் லட்சுமியே ஆதி லட்சுமி. ஒவ்வொரு லட்சுமிக்கும் ஒவ்வொரு குணம் பெயரில் உண்டு. ஆனால் ஆதிலட்சுமிக்கு அப்படியில்லை. ஏனென்றால் , அவளுக்குப் பெயரிட வேண்டிய அவசியமில்லாமல் அவள் மாத்திரமே இருந்தாள் எனப் பௌராணிகர் கூறுவார்.

முதலையின் பிடியில் சிக்கிய கஜேந்திரன் ‘ ஆதி மூலமே ’ என அழைத்தான். அந்த ஆதிமூலம் மூன்று மூர்த்திகளும் இல்லை. திருமாலின் கையிலிருந்த சக்கரமேதான் ஆதிமூலம் எனக் கூறிப் புறப்பட்டுச் சென்று முதலையின் கழுத்தறுத்தது. அந்தச் சக்கரம் ஸ்ரீசக்கரமாகும். அதாவது ஸ்ரீ ஆகிய லட்சுமி ஆகும். அவளே பெருமாளுக்கு ஆதியானவள். அதனால் அவள் ‘ ஆதி லட்சுமி ’ என அழைக்கப்படுகிறாள்.

திருக்குறளில் கடவுள் வாழ்த்தில் வரும் ‘ ஆதிபகவன் முதற்றே உலகு ’ என்பது கூட ஆதிலட்சுமியையும் திருமாலையும் குறிக்கும் என வைணவ பௌராணிகர்கள் கூறுகின்றனர். இத்திருக்கோயிலின் தரைத் தளத்தில் தெற்கு முகமாக ஆதிலட்சுமி அமர்ந்துள்ளாள். ஆதிலட்சுமி திருப்பாதத்திற்குக் கீழ் பூர்ணகும்பம், கண்ணாடி, சாமரம், கொடி, பேரிகை, விளக்கு , ஸ்வஸ்திகம் என்ற அபூர்வ மங்கள அம்சங்கள் அமையப் பெற்றுள்ளன. உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆதிலட்சுமிக்குத் திருமஞ்சனம் செய்தும், அர்ச்சனை செய்தும் குணமடைகின்றனர். மனிதனின் வாழ்வு, இறப்பு இரண்டும் தெற்கோடு தொடர்புடையன. அந்தத் திசையை நோக்கி இரண்டு நிலைகளையும் கட்டுப்படுத்தி அருள்பவள் ஆதிலட்சுமியாவாள். அவள் பொற்பாதம் பற்றியவர்களுக்கு மங்களம் சிறக்கும் என்பதனால் அவளை வழிபட்டுப் பேறு பெற வேண்டியது முக்கியம்.

ஆதிலட்சுமியைக் குறித்து வடநாட்டு மாந்தர்களால் போற்றப்படும் ஒரு சுலோகம் கீழ்கண்ட பொருடையதாய் அமைந்துள்ளது.
‘தேவர்களால் வணங்கப்படுபவளே ! அழகானவளே ! மாதவனின் மனைவியே ! சந்திரனின் சகோதரியே ! பொன்மயமானவளே ! முனிவர்களின் குழுவினால் சூழப்பட்டவளே ! மோட்சத்தை அளிப்பவளே ! இனிமையை அருள்பவளே ! வேதங்களால் துதிக்கப்படுபவளே ! தாமரை மலரில் வசிப்பவளே ! தேவர்களினால் பூஜிக்கப்படுபவளே ! சாந்தியோடு கூடியவளே ! மதுசூதனின் மனையாளே ! மகாலட்சுமியின் முதல் உருக் கொண்ட ஆதிலட்சுமியே ! என்னை எப்பொதும் காப்பாற்ற வேண்டும். எப்பொழுதும் நலன் அருள்வாய்! ’