அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயில் - அஷ்டாங்க விமானம்

எப்போதும் வேத ஒலி முழங்குகின்ற இடத்திலோ, பல்லாயிரம் பசுக் கூட்டங்கள் விளங்கும் இடத்திலோ, வற்றாத நீர் நிலைகள் அமைந்த இடத்திலோ இந்த அஷ்டாங்க விமானம் அமைய வேண்டும் என்று ஆகமங்களும், புராணங்களும் கூறுகின்றன. அதன் படி எப்பொழுதும் ஓம் என்ற பிரணவ ஒலி முழங்கிக் கொண்டேயிருக்கின்ற ஆழ்ந்த அகன்ற வங்கக் கடற்கரையோரம் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.


அஷ்டாங்க விமானத்தின் அழகு

கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம் சுதைச் சிற்பங்கள் கீழ்நிலை மட்டத்தில் நின்று நம்மை ஈர்க்கின்றன. வியக்கத்தக்க வகையில் பிரம்மாண்டமான மந்திரகிரியை மத்தாகவும், கூர்மத்தைப் பீடமாகவும், வாசுகியைக் கயிறாகவும் கொண்டு ஒருபுறம் தேவர்களும் ஒருபுறம் அசுரர்களும் பாற்கடலைக் கடைகிறார்கள். அதிலிருந்து மகாலட்சுமி கையில் மாலையுடன் தோன்றும் அழகு நமக்கு அந்தப் புராணத்தையும் நாராயணனின் அருள் தன்மையையும் நினைவூட்டுகின்றது.

நாம் மேலே ஏறிச் செல்லும் போது, திருக்கோயிலின் தென் கிழக்குப் பகுதியில் மகாலட்சுமி திருமாலுக்கு மாலையிடும் காட்சியும், அருகில் பரமேசுவரன், பிரம்மா, கர்த்தமான் பிரஜபாபதி, இந்திரன், சூரியன், சந்திரன், நாரதர், அக்கினி, சுகர், வருணன், வாயு, துர்வாசர், வசிஷ்டர் அனைவரும் இந்த மங்களகரமான காட்சியைக் கண்டு களிக்கும் காட்சியும் கலையுணர்வுடன் சுதையில் வடிவத்திருப்பதைக் காண முடிகிறது.

தென் மேற்குப் பகுதியிலுள்ள வைகுண்ட தரிசனக் காட்சி மெய் சிலிர்க்கச் செய்யும். அழகான கூர்ம பீடத்தின் மேல் எட்டு இதழ்கள் 4 கொண்ட பத்ம பீடத்தில் சாமரம் வீசுகின்றனர். ஆதிசேஷன் படுக்கை மேல் சங்கம், சக்கரம், சார்ங்கம், கதை இவற்றுடன் வைஜெயந்தி வனமாலை தரித்து, கௌத்துபமணி பிரகாசிக்க, அலங்காரத்துடன் ஸ்ரீதேவி , பூதேவி, நீளாதேவி சமேதராய் அரங்க மண்டபத்தில் திருமால் அருள்புரிகிறார். ஒருபுறம் வைநதேயரும், ஒருபுறம் விஷ்வக்சேனரும், இந்திரர், தேவர் குழாமும், சனகர், சனந்தனர், சனாதனர் போன்றோரும் பல்லாண்டு பாடி வைகுண்டநாதன் தரிசனம் பெறும் காட்சி வடிக்கப்பட்டுள்ளது.