தைரிய லட்சுமி :


மனத்திற்கு தைரியத்தை தருபவள் தைரிய லட்சுமி. ‘அச்சம் தவிர் ’ என்ற பாரதியார் வாக்கிற்கிணங்க, அச்சத்தைப் போக்குபவள் தைரியலட்சுமி.

தைரியலட்சுமி, மகாலட்சுமி திருக்கோயிலின் தரைத் தளத்தில், வடக்கு நோக்கி வீற்றிருக்கிறாள். எட்டுத் திருக்கரங்களைக் கொண்டவள். வலது திருக்கரங்களில் அபயம், சூலம், அம்பு, சக்கரம், முதலியவற்றையும், இடது திருக்கரங்களில் வரதம், கபாலம், வில், சங்கம் முதலியவற்றையும் கொண்டு விளங்குகிறாள்.

தைரியலட்சுமியின் அமைப்பை ஒரு வடமொழி சுலோகம் கீழ்க்கண்டவாறு குறிக்கின்றது. தாமரைப் பூவின் மீது வீற்றிருப்பாள், உருக்கிய பொன் போன்ற நிறத்தினை உடையவள், உயர் கிரீடத்தை உடையவள். தங்கநிற ரவிக்கை அணிந்தவள், எல்லாருக்கும் எல்லாவிதமான மனோதிடத்தை அருள்பவள் எனக் குறிக்கின்றது.

வடக்கு திசை வெற்றித் திசை என்பதினால் வடக்கு நோக்கி அமையப்பட்டுள்ளது. தெளிவான முடிவெடுக்கவும், அத்தியாவசியமான எந்த முயற்சியெடுக்கவும் உறுதியளித்து அச்சத்தைத் தவிர்த்து வெற்றியை அருள்பவள் என இவளைப் பற்றிக் குறிப்பிடப்படுகிறது.

அஷ்டலட்சுமியைத் துதிக்கும் வடமொழி நூல் ஒன்று இவளைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு வருணிக்கிறது.
‘ வண்ண மகளே ! வெல்க ! வெல்க ! வைஷ்ணவியே ! பிருகு முனிவரின் மகளே! மந்திர ரூபிணியே ! மந்திரமயமானவளே ! தேவர் கூட்டம் வழிபடும் அருட்சக்தியே ! ஞான மலர்ச்சியுடையவளே ! கூட்டம் வழிபடும் அருட்சக்தியே ! ஞான மலர்ச்சியுடையவளே ! சாத்திரங்கள் போற்றும் புனித மகளே! இவ்வுலகில் பயத்தை நீக்குபவள் ! நீயே பாவத்தைப் போக்குபவளும் நீயே ! நல்லோர் புகலாகப் பற்றும் திருவடியுடையவளே ! மதுசூதனின் மனைவியே ! நின்னருளால் எனது எல்லாப் பயமும் போகும். நீ வெல்க வெல்க ! தைரிய லட்சுமியே ! என்னை எப்பொழுதும் தைரியம் அளித்துக் காப்பாற்ற வேண்டும்.’

வாழ்வில் இன்னல்கள் மூலம் மனத் தைரியத்தை இழந்தவர்கள் தைரிய லட்சுமிக்கு புடவைகள் சாத்தியும், மலர் மாலைகள் அளித்து அர்ச்சனை செய்தும் மன வலிமைகயைப் பெறுகிறார்கள். விக்கிரமாதித்ய மன்னன் தனக்கு தைரியலட்சுமியின் அருள் இருப்பதால் மற்ற லட்சுமிகள் தன்னை விட்டு நீங்குவதில்லை எனக்கூறியதாக ஒரு வரலாறு உண்டு.