அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயில் - திருவிழாக்கள் :


திருப்பவித்திர உற்சவம் :

“பவித்திரம்” என்பதற்கு தூய்மைப்படுத்துதல் என்று பொருள் . ஓரு ஆண்டின் ஒவ்வொரு நாளிலும் நடைபெறுகின்றன. பூசைகளில் ஏற்படுகின்ற குறைகள் அனைத்தையும் நீக்குவதற்கு நடத்தப்படும் உற்சவம் ‘திருப்பவித்திர உற்சவம்’ எனப்படும். இவ்விழா ஐந்து நாட்கள் நடைபெறும். இந்த ஐந்து நாட்களிலும் காலை மாலை இரு வேலைகளிலும் திருக்கோயில் மண்டபத்தில் ஓம குண்டங்கள் கலசங்கள் அமைத்து ஓமம் செய்யப்படுகின்றது. கடைசி நாளன்று பூசையில் வைத்த கலசங்களில் உள்ள நீரால் மூலவர் சன்னதியில் மகாலட்சுமிக்கும் மகாவிஷ்ணுவிற்கும் திருமஞ்சனம் செய்யப்படுகின்றது.


மார்கழித் திங்கள் :

மார்கழி மாதத்தில் இத்திருக்கோயிலில் அதிகாலை 5.00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. மாதம் 30 நாட்களும் வெண்பொங்கல் பிரசாதம் பக்தா;களுக்கு வழங்கப்படுகிறது.


கோகுலாட்சுமி :

அஷ்ட திதி ரோகிணி நட்சத்திரம் ஆகிய இரு தினங்களின் முன்னும் பின்னும் கோகுலாட்சுமி கொண்டாடப்படுகிறது. கண்ணன் அவதரித்த நன்னாளைக் கொண்டாடும் விழா கிருஷ்ண ஜயந்தி . கிருஷ்ண ஜயந்தியன்று இத் திருக்கோயிலில் மாலை 6.00 மணிக்கு உற்சவருக்குத் திருமஞ்சனம் நடத்தப்படுகிறது. இதற்கு மறுநாள் கண்ணனின் விளையாட்டுப் பண்பைக்குறிக்கும் வகையில் உரியடித் திருவிழா நடைபெறும்.


தீபாவளித் திருநாள் :

ஐப்பசி மாதம் கிருட்டிண பட்சம் சதுர்த்தியன்று இத்தீபாவளிப் பண்டிகை வரும். நரகாசுரனுக்கு மோட்சம் கொடுத்த நன்னாள் தீபாவளிப்பண்டிகை. தீபாவளிக்கு முன்தினம் அனைத்துச் சன்னதிகளுக்கும் ஏகாகந்த திருமஞ்சனம் செய்யப்படுகிறது. தீபாவளிக்கு அனைத்துச் சன்னதிகளிலும் புத்தாடை அணிவிக்கப்படுகிறது. தீபாவளியன்று காலையில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

தீபாவளியன்று இலட்சுமியின் திருமணத்திருநாளாகும். அதனாலேயே தீபாவளியன்று வட இந்தியர்கள் இலட்சுமியைத்தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இதனை முன்னிட்டு லட்சுமி பூஜை என்னும் பூஜை நடத்தப்படுகிறது. இத்திருக்கோயிலில் இலட்சுமிக்கு உரிய ஹோமமும் திருக்கல்யாணமும் நடத்தப்படுகிறது.


நவராத்திரித் திருவிழா :

இத்திருக்கோயில் நவராத்திரி விழா பத்து நாட்கள் நடைபெறுகிறது. இந்தப்பத்து நாட்களிலும் தினசரி காலை பத்து மணிக்கு மகாலட்சுமி உடனுறை மகாவிஷ்ணு (மூலவர்) சன்னதியில் ‘ஸ்ரீ சூக்த ஆராதனம்’ நடைபெறும்.

நவராத்திரி விழாவின் முதல் ஒன்பது நாட்களிலும் மாலை நான்கு மணிக்கு லட்சுமி நாராயணனின் உடற்பட்டு முடிந்ததும் மண்டபத்தில் ஊஞ்சல் அமர்த்தப்படுகிறது. பத்தாம் நாளன்று மாலை 6 மணிக்குத் திருமால் பரிவேட்டை வெளிப்புறப்பாடு மற்றும் வன்னி மரத்தில் அம்பு எய்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் .நவராத்திரியின் பத்து நாட்களிலும் மாலை 6.30 மணிக்குப் பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.


திருக்கார்த்திகை :

கார்த்திகை மாதம் பெளர்ணமியில் வரும் பண்டிகை திருக்கார்த்திகை. இது பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்கினியின் திருப்திக்காகக் கொண்டாடப்படுகிறது . கார்த்திகை அன்று மாலை அனைத்துச் சன்னதிகள் மற்றும் முக்கிய இடங்களில் அகல் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. பின் அனைத்து மூர்த்தங்களும் சாம்பிராணித்தைலம் சாற்றப்படுகிறது. இதையடுத்து நாற்பத்தெட்டு நாட்கள் எந்தச் சன்னதியிலும் திருமஞ்சனம் செய்வதில்லை.


சிறப்பம்சங்கள் :

இத்திருக்கோயில் தமிழகத்தின் தலைநகரம் சென்னை பெசன்ட் நகரில் வங்கக் கடற்கரையோரம் அமைந்துள்ளது இத்திருக்கோயிலின் சிறப்பம்சமாகும் . இத்திருக்கோயில் மகாலட்சுமி மகாவிஷ்ணு மட்டுமல்லாது எட்டு(அஷ்ட) லட்சுமிகளையும் தன்னுள் கொண்டுள்ளது. இப்படி அஷ்ட லட்சுமிகளுக்கும் ஒரே இடத்தில் அஷ்டாங்க விமானத்தில் ஆலயம் கண்ட சிறப்பு உலகிலேயே வேறெங்கும் கிடையாது.

மகாலட்சுமியின் எட்டு அம்சங்களாக ஆதி லட்சுமி தான்ய லட்சுமி தைரிய லட்சுமி சந்தான லட்சுமி விஜய லட்சுமி வித்யா லட்சுமி கஜலட்சுமி தன லட்சுமி திகழ்கின்றனர்.

உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் நாள்தோறும் வந்து கொண்டிருக்கும் சுற்றுலாத்தளமாக இத்திருக்கோயில் விளங்குகிறது.

நெடுநாள் திருமாணம் ஆகாதவர்கள் இத்திருக்கோயிலில் உள்ள லட்சுமி நாராயணனுக்கு திருக்கல்யாண உற்சவம் செய்து திருமண அருளைப்பெறுகிறார்கள்.

திருமணம் ஆகாதவர்கள் குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் சந்தான லட்சுமிக்கு அர்ச்சனை செய்தும் சந்தான லட்சுமியின் அருளைப்பெறுகிறார்கள்.

வியாதிகளால் அவதிப்படுபவர்கள் ஆதி லட்சுமி சன்னதி தன்வந்திரி சன்னதிகளில் அர்ச்சனை செய்தும் தங்கள் வியாதிகளிலிருந்து குணமடைகின்றனர்.

செல்வத்தில் பின்தங்கியவர்கள் தன லட்சுமிக்கு அர்ச்சனை செய்து செல்வ வளம் பெறுகின்றனர்.

கல்வியில் குன்றியவர்கள் வித்யா லட்சுமிக்கு அர்ச்சனை செய்து செல்வவளம் பெறுகின்றனர்.

மனோதிடம் இல்லாதவர்கள் பிரச்சினையில் இருப்பவர்கள் தைரிய லட்சுமிக்கு அர்ச்சனை செய்து மனத் தைரியத்தைப் பெறுகிறார்கள்.

பக்தர்கள் சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாது சென்னை பெசன்ட் நகர் கடற்கரைக்கு வருகின்ற பொது அன்பர்களும் நாள்தோறும் வந்து வழிபடும் திருத்தலமாக இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

பொதுவாகத்திருக்கோயில்களில் திருக்குளம் (புஷ்கரணி) அந்தந்தத் திருக்கோயிலின் உட்புறமோ அல்லது வெளிப்புறமோ அமைந்திருக்கும். ஆனால் வற்றாத வங்கக்கடலையே திருக்குளமாக(புஷ்கரணியாக) கொண்டு இத்திருக்கோயில் விளங்குகிறது.
திருவிழாக்கள் விபரம் :