கஜ லட்சுமி :


‘கஜம் ’ என்றால் ‘யானை ’ என்று பொருள். இருபுறமும் யானைகள் கலசம் ஏந்திச் திருமஞ்சனம் செய்வது போல் அமர்ந்திருப்பதால் கஜலட்சுமி என்ற பெயர் அமைந்தது. கஜலட்சுமியை இராஜலட்சுமி, ஐஸ்வர்ய லட்சுமி எனவும் அழைப்பார்.கஜலட்சுமியின் உருவத்தை வீடுகளின் வாசற்படியின் நிலைப் படிகளில் காணலாம்.

பல நூற்றாண்டுகளுக்கு முன் லட்சுமியின் திருவுருவமே கஜலட்சுமியின் தோற்றத்தில் அமைந்திருந்தது எனக் குறிப்பர். ஸ்ரீ வத்சம் என்னும் ‘திருமருவே ’ கஜலட்சுமி வடிவில் அமைந்தது ஆகும். கி.பி 7 ஆம் நூற்றாண்டு காலத்தில் கூரம், ஏனாதி போன்ற இடங்களில் உள்ள திருவுருவங்களின் இருபுறமும் யானைகள், உயர்ந்த தண்டில் உள்ள தாமரை மலரில் நின்ற தேவிக்கு அபிஷேகம் செய்யும் வகையில் காணப்படுகின்றன.

மாமல்லபுரம் குகைகளில் உள்ள இரு லட்சுமிகளின் திருவுருவங்களும் கஜ லட்.சுமியாகவே காட்சியளிக்கின்றன. இரு கரங்களிலும் தாமரை மலரைத் தரித்திருக்கிறாள். இருபுறமும் தாதியாருடன் இரண்டு யானைகள் நிற்கின்றன.வட இந்தியாவில் ‘பார்குத் ’ என்ற இடத்தில் உள்ள பௌத்தத் தூபி ஒன்றில் உள்ள லட்சுமியின் திருவுருவம் கஜலட்சுமியாகவே உள்ளது.

நிலம் செழுமையுடைய நீர் தேவை என்பதால் நீர் கொண்ட மேகங்கள் யானைகளாகி நில மகளாகிய இலக்குமியின் மீது நீரை ஊற்றுவதை இவ்வுருவங்கள் குறிக்கின்றன என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.இத்திருக்கோயிலின் முதல் தளத்தில் கஜலட்சுமி கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறாள். ஒரே கல்லினாலான இரண்டு யானைகள் இருபுறமும் துதிக்கையில் கலசம் ஏந்திப் போற்றும் வகையில் தாமரை மலரின் மீது வீற்றிருக்கிறாள்.

அனைத்துச் செல்வங்களையும் ( ஐஸ்வர்யங்களையும் ) வேண்டுபவர்கள் கஜலட்சுமிக்கு மலர் மாலை சாற்றியும், புத்தாடைகள் அணிவித்தும் அர்ச்சனை செய்தும் இவளின் அருளைப் பெறுகிறார்கள்.

அஷ்டலட்சுமியைத் துதிக்கும் வடமொழி நூல் ஒன்று இவளைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு வருணிக்கிறது.
‘தீவினைகள் அழிக்கும் அழகியே ! வெல்க ! எல்லாப் பயன்களையும் அருள்பவளே ! சாத்திரமயமானவளே ! சாத்திரமயமானவளே ! தேர்,யானை, புரவி, காலாள் சூழப் பணியாட்களும் , மக்களும் துதிக்க விளங்குபவளே ! அரியும், அரனும், பிரம்மனும் வணங்க நிற்பவளே ! மழை அருள்பவளே ! தாபங்களைத் தீர்க்கும் திருவடியினையுடையவளே ! மதுசூதனன் மனைவியே ! வெல்க வெல்க ! கஜலட்சுமியே ! என்னை எப்பொழுதும் காக்க வேண்டும். ’