அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயில் - திருத்தல வரலாறு

தோற்றம்

 இந்தியாவில் மும்பை நகரம் செல்வச்செழிப்பு மிக்க நகரமாகும். அதற்குக்காரணம் அங்கு கோயில் கொண்டுள்ள மகாலட்சுமி தாயார் நாராயணனின் அருள் சக்தியே மகாலட்சுமியாகவும் உள்ளனர் என்று சாத்திரங்கள் கூறுகின்றன. அந்த மகாலட்சுமி திருக்கோயிலைச் சென்னையில் அமைக்கவேண்டும் என்று காஞ்சி காமகோடி சங்கராச்சாரி சுவாமிகள் எண்ணினார். அவர் எண்ணிய அத்திருப்பணியை திரு. முக்கூடர் சீனிவாச வரதாச்சாரியார் என்பவரிடம் ஒப்படைத்தார்.

 சென்னை மாநகரில் உள்ள பெசன்ட் நகரில் ஓடை மாநகர் என்ற பகுதியில் வங்கக் கடற்கரையோரம் 1974-ம் ஆண்டு ஜனவரி மாதம் இத் திருக்கோயிலின் திருப்பணி தொடங்கப்பட்டது. மூலவர் விமானத்திலேயே எட்டு(அஷ்ட) லட்சுமிகளும் எட்டுச் சன்னதிகளுடன் கூடிய அஷ்டாங்க விமானத்துடன் மகாலட்சுமி உடனுறை மகாவிஷ்னு திருமணத் தம்பதியராய் விளங்கும் வகையில் இத்திருக்கோயில் அமைக்கப்பட்டது.

 காஞ்சி பெரியவரால் தேர்ந்துணரப்பட்ட மகாலட்சுமி மகாவிஷ்ணு எட்டு(அஷ்ட) லட்சுமிகளையும் அகோபிலமடம் நாற்பத்து நான்காவது பட்டம் வேதாந்த தேசிக யதீந்திர மகா தேசிகன் சுவாமிகள் முன்னின்று நிறுவுதல் செய்தார்.

 இத்திருக்கோயிலின் திருமுழுக்கு (மகாசம்ப்ரோட்சனம்) திருவள்ளுவர் ஆண்டு 2006 பங்குனி மாதம் 23ம் நாள் (5-4-1976) அன்று நடைபெறுகிறது.

அமைப்பு

 மகாலட்சுமி திருக்கோயில் கிழக்கு நோக்கி வங்கக்கடலை நோக்கிய வண்ணம் அமைந்துள்ளது. 45 அடி நீளமும் 45 அடி அகலமும் உள்ள சதுர அமைப்பின் மீது 63 அடி உயரமுடைய இத்திருக்கோயில் அமைந்துள்ளது. அடிப்பீடம் முன்றரை அடி உயரம் உள்ளது.

 இத்திருக்கோயிலை ஒரு முறை வழிபட்டால் கூட நினைவில் இருக்கும் படி அஷ்டாங்க விமானத்தில் ஒன்பது சன்னதிகள் அமைந்துள்ளன. அதே போன்று தரைத்தளத்திற்கு மேல் சென்று இறங்கி வரும் பாதை ஓம் வடிவாகவும் அமைந்துள்ளது.

 தரைத்தளத்தில் கிழக்கு நோக்கி மகாலட்சுமி உடனுறை மகாவிஷ்ணு இருவரும் திருமணக்கோலத்தில் திருக்காட்சி தருகின்றனர். கருவறையின் முன்புறம் இருபத்து நான்கு மண்டபத்திற்கு கிழக்கே புதிய சொற்பொழிவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. மகாலட்சுமி சன்னதியைத் தரிசனம் செய்துவிட்டு வரும்போது பதினெட்டு படிகள் உள்ளன. இந்த 18 படிகளும் 18 தத்துவங்களுக்கு உருவாய் அமைக்கப்பட்டுள்ளன. சிற்ப ஆகம சாஸ்த்திரப்படி அவை குறுகலாக 28 அங்குல அளவு கொடுத்து அமைக்கப்பட்டுள்ளன. மேலே ஏறிச் சென்றால் முதல் தளத்தில் கிழக்கே கஜலட்சுமி தெற்கே சந்தன லட்சுமி மேற்கே விஜயலட்சுமி,வடக்கே வித்யாலட்சுமி ஆகிய நான்கு லட்சுமிகளின் தரிசனம் கிடைக்கும் . அடுத்தடுத்துப் படிகள் மேலே ஏறிச் சென்றால் தனலட்சுமியின் தரிசனம் கிடைக்கும்.

 தனலட்சுமியைத் தரிசனம் செய்துவிட்டு மண்டப வழியே கீழே இறங்கி வந்தால் தெற்கே ஆதிலட்சுமி மேற்கே தான்யலட்சுமி வடக்கே தைரிய லட்சுமிகளின் தரிசனம் கிடைக்கும்.