மூலவர் மகா விஷ்ணு, மகாலட்சுமி

பிரதான கர்ப்பக் கிரகம் 10 அடி அகலத்தில் , 14 அடி உயரம் உடையது. சுத்தமான கருங்கல் சுவரால் சுற்றும், மேல் பகுதியும் அமைக்கப்பட்டுள்ளது. மூலவர் மகாலட்சுமித் தாயார் பத்ம பீடத்தில், நின்ற திருக்கோலத்தில் இரண்டு திருக்கரங்களிலும் அபய, வரத முத்திரைகளுடன் மிகவும் அழகாகக் காட்சி அளிக்கிறாள். மகாலட்சுமித் தாயார் பிரதானமானாலும் , உற்சவ மூர்த்தியாக ஸ்ரீநிவாசர் என்னும் பெயரோடு மகாலட்சுமி உடனுறை மகாவிஷ்ணு அருள்புரிகிறார்.

மகாலட்சுமி, மகாவிஷ்ணுவிற்கு வெள்ளிக்கிழமைகளில் தரிசனம் செய்தும், திருமஞ்சனம் செய்தும் இறையருளைப் பெறலாம். மகாலட்சுமி சன்னதியில் திருமஞ்சனம் செய்யும் காலங்களிலும், பூசைகள் செய்யும் காலங்களிலும் மட்டும் அர்ச்சனை உண்டு. மற்ற நேரங்களில் தைரிய லட்சுமி சன்னதியில் அர்ச்சனை செய்யப்படுகிறது.

நெடுநாள் திருமணம் ஆகாதவர்கள் லட்சுமி நாராயணனுக்குத் திருக்கல்யாண உற்சவம் செய்தும் திருமண பாக்கியத்தைப் பெறுகிறார்கள்.

மகாலட்சுமி, மகாவிஷ்ணு திருமணக் கோலத்தில் நின்ற வண்ணம் உள்ளதால், எப்பொழுதும் மகாலட்சுமிக்கு 9 கஜம் பட்டுப் புடவையும், மகாவிஷ்ணுவுக்கு 10 முழப் பட்டு வேஷ்டியும் மட்டுமே சார்த்தப்படுகின்றது.