அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயில் - மற்ற திருத்தலங்கள்

அருள்மிகு தசாவதாரச் சன்னதி :

 மகாலட்சுமி திருக்கோயிலின் தென்கிழக்குப்பகுதியில் திருமால் எடுத்த பத்து அவதாரங்களின் உருவச் சிலைகள் வரிசையாக வடக்கு நோக்கி அமைந்துள்ள சன்னதி தசாவதாரச்சன்னதி அமைந்துள்ளது. அசாவதாரங்களை ஒரு சேர வழிபடுவதால் நவக்கிரக தோஷங்கள் நீங்கும் என சோதிடர்கள் வரிகட்டுகின்றனர்.

திருமாலின் வழிநடத்தும் படைத்தளபதியான விசுவக்சேனர்(சேனை முதலியார்) கிழக்குப்பக்கம் பார்த்தவண்ணம் அமர்ந்திருக்கிறார்.

அருள்மிகு கமல விநாயகர் சன்னதி :

எந்தக் காரியமும் செய்வதற்கு முன்பாக விநாயகப் பெருமானின் அருளைப் பெற வேண்டும். விநாயகர் ஓம்கார வடிவமானவர். தாமரை மலர் மீது வீற்றிருப்பதால் இவர் கமல விநாயகர் என அழைக்கப்படுகிறார். கமல விநாயகர் சன்னதி மகாலட்சுமி திருக்கோயிலின் தென்மேற்குப் பகுதியில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இவர் அரச மரத்தடியில் வலம்புரி தும்பிக்கையுடன் அருள்புரிகிறார்.

அருள்மிகு குருவாயூரப்பன் சன்னதி :

சிவ பெருமான் ஆணைப்படி குரு,வாயு ஆகிய இருவரும் நாராயணனின் விக்கிரகத்தைப் பிரதிட்டை செய்ததால் இவர் குருவாயூரப்பன் எனப்பட்டார் என குருவாயூர் தலபுராணம் கூறுகிறது.

இங்கு எழுந்தருளியுள்ள குருவாயூரப்பன் சன்னதி மகாலட்சுமி திருக்கோயிலின் தென்மேற்குப் பகுதியில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. வாயு தேவனாகிய காற்று குருவாகிய கிருஷ்ணனை எப்போதும் இங்கு இருக்கும் தனது ஒலியால் துதித்து கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.

அருள்மிகு சக்கரத்தாள்வார்- யோக நரசிம்மர் சன்னதி :

உக்கிரமான நாராயணன் சக்கர வடிவில் இருப்பதனால் சக்கரத்தாழ்வார் என அழைக்கப்படுகின்றார். சக்கரத்தாழ்வார் மற்றும் யோக நரசிம்மர் சன்னதி மகாலட்சுமி திருக்கோயிலின் மேற்குத் திசையில் கிழக்கு முகமாக அமைந்துள்ளார்.

ஒரே சிலையின் முன்புறம் சக்கரத்தாழ்வார் உருவமும் அதன் பின்புறம் யோக நரசிம்மர் உருவமும் சிலையும் அமைந்திருப்பது அனைவரையும் வியக்க வைக்கிறது. தினப் பிரதோஷத்தில் பானக நெய்வேத்தியமும் ஸ்ரீசுதர்சனருக்கு கல்கண்டு முந்திரி நிவேதனமும் செய்து வழங்குவதைச் சிறப்புப் பிரார்த்தனையாகக் கொள்கின்றனர்.

அருள்மிகு ஆஞ்சநேயர் சன்னதி :

ஆஞ்சநேயர் சன்னதி மகாலட்சுமி திருக்கோயிலின் வடமேற்கு பகுதியில் கிழக்கு முகமாக அமைந்துள்ளது. இவர் அபயம் அளிப்பதால் அபய ஆஞ்சநேயர் அனுக்கிரகம் செய்வதால் அனுக்கிரக ஆஞ்சநேயர் என அழைக்கப்படுகிறார். இவருக்கு தினசரி துளசி மாலையும் வெற்றிலை மாலையும் அணிவிக்கப் பெறுகிறது.

அருள்மிகு தன்வந்திரி சன்னதி :

நாராயணன் கூர்ம அவதாரம் எடுத்து மந்திர மலையைத் தன் மீது தாங்கினார். அதில் வந்த மருந்தாகிய அமுதத்தை அமரர்களுக்கு வழங்கியுதவினார். இவரே தன்வந்திரி என அழைக்கப்படுகிறார். தீராத வியாதிகள் குணமாவதற்கு இடையே அருள் அவசியமாகிறது.

இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள தன்வந்திரி சன்னதி மகாலட்சுமி திருக்கோயிலின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ளது.

நோய் நொடிகளால் அவதிப்படுபவர்கள் தன்வந்திரிக்குத் திருமஞ்சனம் செய்தும் அர்ச்சனை செய்தும் தங்கள் வியாதிகளிலிருந்து நற்கதியடைகின்றனர். அமாவாசை பெளர்ணமி நாட்களில் இவருக்கு அர்ச்சனை செய்வது நோயின் வீரியத்தைக் குறைத்து இதமும் சுகமும் அளிக்கும் என்ற அடிப்படையில் அர்ச்சனை நடைபெறுகிறது.

அருள்மிகு கருடாழ்வார் சன்னதி

கருடாள்வார் சன்னதி மகாலட்சுமி சன்னதியின் முன் மண்டபத்தில் அமைந்துள்ளது. இங்கு வீற்றிருக்கும் கருடாழ்வார் அனைவரையும் வழிநடத்தும் முதலாளியாக விளங்குகிறார்.