சந்தான லட்சுமி :


‘சந்தானம் ’ என்பதற்குக் குழந்தை என்று பொருள். குழந்தை வரத்தை அளிப்பதனால் இவளுக்குச் ‘சந்தானம் லட்சுமி’ என்று பெயர் வந்தது. மற்றச் செல்வங்களை விடச் சிறந்த செல்வம் குழந்தைச் செல்வம் ஆகும். அத்தகைய செல்வத்தை அளிப்பவள் சந்தானலட்சுமி.

இத்திருக்கோயிலின் முதல் தளத்தில் தெற்கு முகமாகச் சந்தானலட்சுமி வீற்றிருக்கிறாள். சடையுடன் கிரீடத்தைத் தரித்தபடி வரத, அபயத் திருக்கரங்களுடன் கத்தி, கேடயம் ஆகிய ஆயுதங்களை அணிந்து காட்சி தருகிறாள். இவளது பீடத்தில் இரு கன்னிப் பெண்கள் சாமரம் வீசியும் விளக்கினைக் கையில் ஏந்திய வண்ணமும் நின்று கொண்டிருக்கின்றனர்.

சந்தானலட்சுமியைப் பற்றி இருவித வருணைகள் வடமொழியில் உள்ளன. பச்சை நிறமுடையவள், பால்குடமும் சங்கும் ஏந்திய கைகளை உடையவள் எனவும், மற்றொன்று சடையையும் கிரீடத்தையும் தரித்தவள் வீற்றிருந்த கோலத்தில் ஆபரணங்கள் அணிந்து கருணை நிரம்பி வரத, அபய, கத்தி ஆகியவற்றைக் கையில் கொண்டவள் எனவும் குறிப்பிடுகின்றது.

பிள்ளைப் பாக்கியம் பித்ருக்களைக் கடைத்தேற்றும் என்பது இந்து மத நம்பிக்கை. நம் முன்னோர்கள் இருக்கும் தென் திசையை நோக்கி, ‘உங்கள் சந்ததியருக்குப் பிள்ளைப் பேறு அளித்து அவர்களுக்கும் உங்களுக்கும் நற்கதியளிக்கின்றேன்! ’ எனச் சொல்லும் வகையில் அமர்ந்திருக்கிறாள்.

நீண்ட நாள் திருமணம் ஆகாதவர்கள், குழந்தைப் பாக்கியம இல்லாதவர்கள் பித்ரு தோஷம் உள்ளவர்கள் சந்தானலட்சுமிக்கு மலர் மாலைகள் சார்த்தியும், அர்ச்சனை செய்தும், திருமண அருளையும், குழந்தை அருளையும் பெறுகிறார்கள்.

அஷ்டலட்சுமியைத் துதிக்கும் வடமொழி நூல் ஒன்று இவளைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு வருணிக்கிறது.
‘கருடனை வாகனமாகக் கொண்ட மோகினியே ! சக்கரம் தாங்கி அன்பர்களைக் காத்து அன்பை வளர்ப்பவளே ! அறிவுமயமானவளே! உயர் நலமுடையவளே ! உலகனைத்தும் நலம் பெற அருள்பவளே ! ஏழிசைக் கானத்தினால் துதிக்கப்படுபவளே ! சூரரும் அசுரரும் தேவரும் முனிவரும் மாந்தரும் பணிந்து துதிக்கும் இணையடி வாய்ந்தவளே ! இம்மைக்கு மட்டும் இல்லாமல் மறுமைக்கும் வாழ்வளிக்கும் சந்தானத்தை அருள்பவளே ! மதுசூதனன் மனைவியே ! வெல்க வெல்க ! சந்தான லட்சுமியே ! என்னை எப்பொழுதும் காக்க வேண்டும் ’.