வித்யா லட்சுமி :


‘வித்யை ’ என்பதற்கு இங்கு ‘கல்வி ’ என்று பொருள். கல்விச் செல்வத்தை வழங்குவதனால் இவளுக்கு வித்யா லட்சுமி என்று பெயர். இத்திருக்கோயிலில் சரஸ்வதியை வித்யா லட்சுமி உருவாக வழிபடுகின்றனர்.

கலைவாணியையும் லட்சுமியையும், இணைத்து நிற்பவளே வித்யா லட்சுமி. இந்தத் திருமகளால் கல்வியும் வளரும். செல்வமும் வளரும். பொருளீட்டலும் ஒரு கலை. அந்தக் கலையையும் இவள் அருளுவதால் இவளை வித்யாலட்சுமி என அழைக்கின்றனர். கலைவாணி நிறைந்த கல்வியையும் ஆற்றலையும் வித்தைத் திறனையும் அளிப்பாள். ஆனால் வித்தைகளைக் கொண்டு வாழ்வியல் நலன்களைப் பெற வைப்பவள் வித்யா லட்சுமி.

ஸ்ரீ ஜெயாகிய சம்ஹிதையில் ‘வாகீஸ்வரி ’ ( நாமகள் ) என்ற பெயருடன் கீழ்க்கண்டவாறு விளக்கப்பட்டுள்ளது. அதிகமான வெண்மை உருவுடையவள். சங்க, பத்ம, வரத, அபய அஸ்தங்களுடன் கூடியவள், நூல்களை இயற்றிக் கொண்டிருக்கும் நாத சொரூபமானவள் என்று குறிப்பிடப்படுகிறது. ‘லக்ஷ்மி தந்திரம் ’ என்னும் நூல் சகல ஞான சம்பத்துக்களையும் ஆற்றலையும் அருள்பவள் எனக் குறிப்பிடப்படுகின்றது.

இத்திருக்கோயிலின் முதல் தளத்தில் நம் வல்வினை போக்கி, நம்மை வாழ வைக்க வடக்கு நோக்கிக் குதிரை வானத்துடன் கூடிய தாமரைப் பீடத்தில் வீற்றிருக்கிறாள்.

கல்வி, வித்தைகளில் சிறக்க, வித்யாலட்சுமிக்கு மலர் மாலைகள் சார்த்தியும், புத்தாடை அணிவித்தும், அர்ச்சனை செய்தும், அவளுடைய திருவருளைப் பெறுகிறார்கள்.

அஷ்டலட்சுமியைத் துதிக்கும் வடமொழி நூல் ஒன்று
‘ தேவர்கள் துதிக்கும் தலைவியே ! கலைமகளுக்குத் தலைவியே ! பிருகு முனிவரின் திருமகளே ! துயரம் தீர்ப்பவளே ! ரத்தின மயமானவளே ! நவமணி பதித்த குண்டலம் அணிந்தவளே ! அமைதி பொருந்திய மென்னகை முகத்தினையுடையவளே! கலியுக பாவங்களைத் தொலைப்பவளே ! வேண்டியோர் விரும்பியவுடன் கலைகளை அருளிப் பயன்களை அருளும் திருக்கரங்களை உடையவளே ! மதுசூதனின் மனைவியே ! வித்யா லட்சுமியே ! என்னை எப்பொழுதும் காக்க வேண்டும் ’ என வேண்டுகிறது.